கன்னியாகுமரி:அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருவதால் நேற்று(ஆகஸ்ட் 1) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே கேரள மாநிலம் கொல்லத்தில் புயல் எச்சரிக்கை அறிந்து கரை திரும்பிக்கொண்டு இருந்த விசைப்படகு சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி தடுமாறும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் பயணித்த நான்கு மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். மூன்று பேர் மீட்கப்பட்டனர். ஒருவரைத் தேடி வருகின்றனர் . மேலும் இதனிடையே நேற்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து படகில் தொழிலுக்குச்சென்ற கன்னியாகுமரி மாவட்டம், இனையம், புத்தன்துறை கடற்கரை கிராமத்தைச்சார்ந்த ஜான் என்பவரின் மகன் கில்சன் (21) மற்றும் இருவர் கடலில் தொழில் செய்துகொண்டிருந்தபோது காற்றும், மழையும் அதிகமாக இருந்ததால் கரைக்குத் திரும்பி கொண்டிருந்தனர்.
கடல் சீற்றத்தில் சிக்கிய விசைப்படகு - வெளியான திக்திக் காட்சிகள் கரை வந்து கொண்டிருந்த போது கடல் சீற்றத்தில் சிக்கி அவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் கில்சன் கடலில் தவறி விழுந்து இறந்ததாகவும், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கேரளாவைப்போல், தமிழ்நாடும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்- மீனவர்கள் கண்டனம்