குமரி: உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல் தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளைப் போல இந்திய அளவில் இந்த போட்டிகள் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. இந்தப் போட்டிகள் குறித்து போதிய விழிப்புணர்வும் இல்லை.
இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர், இந்திய அளவில் பல்வேறு ஸ்ட்ராங் மேன் சாதனைகள் புரிந்து வருகிறார். ஏற்கனவே, 13.5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் இழுத்து தேசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூக்கி நடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
இதனை நேரில் ஆய்வு செய்த சோழன் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் அவருக்கு இந்த உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியது. ஏற்கனவே உலக சாதனையாக 155 கிலோ கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 435 கிலோ காரை 25 மீட்டர் தூக்கி நடந்து சாதனைப் படைத்துள்ளார்.