கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள மூவேந்தர் நகர், பெருமாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து குமரி - நெல்லை எல்லைப் பகுதியான முப்பந்தல் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அதில், ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரை கைது செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனம், மூன்று செல்போன்கள் ஆகியவற்றையும் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார் ஏழு கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக ஆறு நபர்களை குமரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.