குமரி:உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனைப் படைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியானது முதல்முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த கண்ணன் என்பவர் தேர்வாகியுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், இந்திய அளவில் பல்வேறு ஸ்ட்ராங் மேன் சாதனைகள் புரிந்துள்ளார். ஏற்கனவே , 13.5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் இழுத்து தேசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூக்கி நடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பஞ்சாபில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க அவர் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த போட்டிகள், லாக் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. இதற்காக தினமும் சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தீவிர உடற்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சியில் கண்ணன் ஈடுபட்டு வருகிறார். சாதாரணமாக இந்தப் பயிற்சிகளை யாரும் செய்ய முடியாத நிலையில் கடினமாக இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.