கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட ராகுல் காந்திக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அடுத்த டெரிக் சந்திப்பில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து சுங்கான்கடை வந்த அவருக்கு கன்னியாஸ்திரி ஒருவர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். வில்லுக்குறியில் மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தக்கலை சந்திப்பு பகுதியில் கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்களிடம் அவர் தேர்தல் பரப்புரை செய்தார்.
காமராஜர் போன்ற தலைவர் முதலமைச்சராக வரவேண்டும்- ராகுல் விருப்பம் அப்போது, "இந்தியா பல்வேறு கலாசாரங்களையும், பண்பாடுகளையும் கொண்ட நாடு, பிரதமர் மோடி தமிழ் கலாசாரத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ் நாட்டைத் துண்டாடுவதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தியாவுக்கு தமிழ்நாடு சிறப்பாக வழிகாட்டிவருகிறது.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு தொழில்களை மோடி அழித்து வருவதோடு, விவவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அவர் அழித்துவருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைப் பாதிக்கிற வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் கூட தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மிகப்பெரிய ஊழல்வாதியாக இருந்துவருகிறார். அதனால்தான் இவர்களை மோடி இயக்கிவருகிறார்.
பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும். இங்கு, லூர்தம்மாள் சைமன், மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் வாழ்ந்துள்ளனர். மார்சல் நேசமணி குமரி மாவட்டத்தில் தலை சிறந்து விளங்கியவர்" என்றார்.
இதையும் படிங்க:பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட ராகுல் காந்தி!