கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று இரவு ஆட்டோவில் வந்த மாற்றுத்திறனாளி வள்ளிநாயகம் என்பவர் திடீரென கருப்பு கொடி கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் நீண்ட வாக்குவாதத்திற்க்கு பின் ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து மாற்றுத்திறனாளியை வெளியேற்றினார்கள். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளி வள்ளிநாயகம் கூறுகையில்,
பல வருடமாக தமிழக அரசிடம் ஓட்டுனர் உரிமம் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறேன். நகர்ந்து கூட செல்ல முடியாத நிலையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நான் ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். ஆனால், எனக்கு ஓட்டுனர் உரிமம் தர அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஓட்டுனர் உரிமம் வழங்க வலியுறுத்தல் மாற்று திறனாளி போராட்டம் இதற்காக உண்ணாவிரதம் இருப்பதற்காக சுதந்திர தினமான நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தேன். அப்போது போலீசார் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு போய் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வைத்தனர். பின் இரவு தான் என்னை விடுவித்தனர். விடுவித்த உடனே மீண்டும் நான் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து என்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரத போராட்டத்தை தொடங்கியுள்ளேன்" என கூறினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சாய் தள வசதிகள் இல்லாததால் கழிவறை கூட செல்ல முடியாத ஒரு நிலை இருந்து வருகிறது. எனவே, என்னை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமமும், கழிவறை செல்ல சாய் தளம் வசதியும் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க:11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் அன்பில் மகேஷ்