கன்னியாகுமரி: குமரி மாவட்டம், முகிலன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முரளிதன். எம்.இ, பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த 36 வயதான சைலஜா என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து, இந்த தம்பதியருக்கு 7 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்த தம்பதியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் தக்கலை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியது குறிப்பிடத்தக்கது.
பின் முரளிதரன் ஐடி கம்பெனி பணியை விட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காலை, மாலை என தனது மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவரது தந்தை கோபால் வழக்கம் போல் சனிக்கிழமை மாலை வீட்டிற்குச் சென்றபோது கதவு பூட்டி இருந்ததால் சத்தமிட்டு அழைத்துள்ளார்.
அதிக நேரமாகியும் கதவு திறக்காத நிலையில், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கதினரின் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் தற்கொலை செய்த நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் இறந்த நிலையிலும், பேரன் ஜீவா கொலை செய்யப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாகவும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எம்.இ.; பி.எல் முடித்து பெங்களூருவில் ஐடி கம்பெனியில் பணியாற்றிய முரளிதரன் மனைவி சைலஜாவுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.