கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்துவந்த கணேசன்(70) என்பவரது குடும்பம் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது வீட்டை இழந்தது. பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி, குடை தைக்கும் தொழில்செய்து கணேசன் தனது குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகளும், மகனும் அவரவருக்கு பிடித்தவர்களைக் காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரை தனியாகத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். சிறிது நாட்கள் கழித்து பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல்கூட கிடைக்காமல்போனது. பின்னர், இருவரும் வீடு வீடாக குடை, செருப்பு ஆகியவை தைப்பது, ஈயம் பூசுவது போன்ற பணிகளைச் செய்து பிழைப்பு நடத்திவந்தனர். இதற்கிடையே பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் எனவும் அவர்கள் ஊர் ஊராகத் தேடிவருகின்றனர்.