கன்னியாகுமரி:பாசனக் குளங்களை அரசு முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால் நெல் விவசாயம் பல கிராமங்களில் முடங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே பீமநகரி ஊராட்சியில் அகஸ்தியர் குளத்தைப் பல ஆண்டுகளாக தூர் வாராமல் விட்டதால் குளத்தில் தண்ணீர் தெரியாத அளவிற்குப் பாசியும், புல் புதர்களும் வளர்ந்துள்ளன. இதனால் இந்த குளத்தை நம்பி இருந்த கிராம மக்களும், விவசாயிகளும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தில் முன்னணி மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டாண்டு காலமாகத் திகழ்ந்து வருகிறது. இயற்கையாகவே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், ஆறுகள், கால்வாய்கள், அணைகள் என நீர்நிலை ஆதாரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் என்பதால் விவசாயமும் முன்னணித் தொழிலாக நடந்து வந்தது.
ஆறுகள், குளங்கள் ஒவ்வொரு கோடைகாலத்திலும் வேளாண்மைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரால் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், பல ஆண்டுகளாக மாவட்டத்தில் பல குளங்களை அரசு தூர்வாரவோ, சீரமைப்புப் பணிகளை செய்யாததால் அந்த குளத்தை நம்பி இருந்த பாசன நிலங்களில் விவசாயம் முடங்கி உள்ளது.