கன்னியாகுமரி: கேரளா வந்த தமிழர்கள் 48 பேரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாநில எல்லையில் விட்டுச்சென்ற கேரள அரசு அலுவலர்களின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட, மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெளியூரிலிருந்து வரும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வேளையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர், ரயில் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். கேரள அரசு இவர்கள் குறித்து எந்த தகவலையும் தமிழ்நாடு அரசுக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கேரளா அரசு இந்த 48 பேரையும் பேருந்தில் அழைத்து வந்து கேரளா - தமிழ்நாடு எல்லை பகுதியான களியக்காவிளையில் விட்டுச் சென்றனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு எல்கைக்குள் நுழைந்த இவர்களை, உரிய அனுமதி இன்றி வருவதாகக் கூறி கேரளா காவல் துறையினரும், சுகாதாரத்துறையினரும் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனர். இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேரும் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அனைவரும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கரோனா பரிசோதனை கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு, அனைவரின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.
பின்னர், இணையதளம் மூலம் அனுமதி பெற்றவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து தனித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.