கன்னியாகுமரி: கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து கேரள மாநில எல்லை மாவட்டமான கன்னியாகுமரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் வில்லுக்குறி பகுதியைச்சேர்ந்த 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி காணப்பட்டதால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவப்பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் குரங்கம்மை பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும்.
மேலும் கேரள - தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை உட்பட 37 சோதனைச் சாவடிகளிலும் எந்த வித மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளபடவில்லை. இதேபோல் கரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சுகாதாரத்துறை சோதனைச்சாவடிகள் அடைக்கபட்ட நிலையிலேயே காணப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவிலிருந்து சுற்றுலா மற்றும் இதரப்பணிகளுக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் மாவட்டத்தின் தமிழ்நாடு - கேரள எல்லையில் மருத்துவத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபடாததால், தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் வழியாக கரோனா நோய்த்தொற்று மற்றும் குரங்கு அம்மை நோய்த்தொற்றும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மருத்துவ முகாமினை செயல்பாட்டுக்கு கொண்டுவந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இதையும் படிங்க:சென்னையில் குரங்கம்மைக்கான பரிசோதனை மையம் திறப்பு!