கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் அமைந்துள்ளது, வீரவநல்லூர் எனும் கிராமம். இந்தக் கிராமத்தில் பழமையான சிவபாண்டி ஆண்டார் கல்மடம் ஒன்று உள்ளது. இந்த கல்மடத்தில் 2 பெரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, 'சில மாதங்களுக்கு முன்பு முனைவர் தவசிமுத்துமாறன் எனக்கு 2 கல்வெட்டுகளுடைய புகைப்படங்களை அனுப்பி இவற்றைப் பிரதி செய்ய முடியுமா? என்று கேட்டார். நான் அவற்றைப் பிரதி செய்ய முயன்றபொழுது கல்வெட்டுப்படிகள் தெளிவாக இல்லாமல் இருந்ததை அறிந்தேன்.
குமரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு எனவே நண்பர் பால் பேக்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் வீரவநல்லூர் கிராமத்துக்குச் சென்றேன். வீரவநல்லூரின் பழைய பெயர் 'வீரகேரள நல்லூர்' என்பதை அறிந்தேன். அங்கு கல்மடத்தில் இருந்த கல்வெட்டுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இரண்டு கல்வெட்டுகளும் மிகப்பெரியதாக இருந்தன.
அதில், ஒரு கல்வெட்டு செப்புப் பட்டய வடிவில் இருந்தது, கூடுதல் சிறப்பு. கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்யக் கடினமாக இருந்தது. காரணம், கல்வெட்டுகள் முழுவதும் பழந்தமிழரின் அளவைக் குறியீடுகள் நிறைந்து காணப்பட்டன. கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய சில மாதங்கள் தேவைப்பட்டன.
கல்மடத்து வாயிலின் வடக்குப்பக்கத்தில் முதல் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு செப்புப்பட்டயம் வடிவில் அமைந்துள்ளது. கல்வெட்டு கி.பி.1678ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் பாண்டிய மன்னனும், இராமநாச்சியாரும், கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் வழங்கிய தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
பாண்டிய மன்னன் அளித்த கொடை: பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் கி.பி.1641ஆம் ஆண்டு வீரகேரள நல்லூர் கல்மடத்தை அமைத்து பட்டயம் மூலம் தானமும் செய்துள்ளான். இவன் வரகுணராம பாண்டியனாக இருக்கலாம் அல்லது அவன் காலத்துக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனாக இருக்கலாம். பாண்டியன் வழங்கிய தானநிலம் அகத்து வைக்குடிப் பற்று, வாகையடிப்பகுதி, வடக்குப் பற்று, அரசடிப்பள்ளம், பத்தலடி கீழ்க்கடை, சென்னலடி, பனைவிளை திருத்து ஆகிய பகுதிகளில் இருந்ததாக கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் அவன் பனைவிளை, நரசிங்கன் தோப்பு, தோப்பறில் மேத்தியாபிள்ளை நிலத்திலிருந்து வந்த கடமைப் பணத்தையும் தானமாக வழங்கியதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூர் கல்மடத்தில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அரிய கல்வெட்டுகள் சாணார் குல இராமநாச்சியார் அளித்த தானம்: 'சாணார்' குலத்தைச் சேர்ந்த இராமநாச்சியார் கி.பி.1678ஆம் ஆண்டு வீரவநல்லூர், வடக்கு அத்திப்பட்டி, அகத்து வைக்குடி பற்று ஆகிய பகுதியில் இருந்த நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளாள். அவள் வழங்கிய அந்த தான நிலத்திலிருந்து கோட்டை 18 1/4 பதக்கு நெல் பாட்டமாகக் கிடைத்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.
கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் அளித்த தானம்:கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் மேற்படி ஆண்டில் தென்கரை பெரியகுளத்தின் மடை வடக்கு நிலப்பகுதியின் பாட்டம் நெல், அகத்து வைக்குடிப் பற்றில் நெடுங்குளம் மடை திடலடி நிலத்தின் கடமைப் பணம், கேப்பங்குழி கடமைப் பணம், காஞ்சிறையடி விளைநிலத்தின் பாட்டப்பணம், அகத்து வைக்குடி மனை 2-க்கும் இலுப்பைகளுக்குமான பாட்டப்பணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்ததாக இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தானங்களின் மூலம் நடந்த பூசைகள்:மேற்படியாரின் மேற்படி தானங்கள் மூலம் சிவிந்திரமுடைய நயினார் வகைக்கும் அகத்துவைக்குடி வகைக்கும் நெல் கோட்டை 118 1/2 வீசம் 3ஆம் வரவாக கிடைத்தமை பற்றியும் கல்வெட்டு சுட்டிக் காட்டுகிறது. இந்தப்படி மடத்திற்கு வந்த வரவு மூலம் பிள்ளையார் பூசை, மகேசுவரபூசை, கார்த்திகை மாதம் மூலம் பிறந்தநாள் மகேசுவர பூசை, அத்தம் பிறந்தநாள் மகேசுவர பூசை ஆகியவற்றின் செலவுக்கு மடத்தின் பண்டாரத்திலிருந்து நெல் கொடுக்கப்பட்டுள்ளன. தலைமடத்தோப்பில் அணைஞ்ச பெருமாளும் செந்திப் பெருமாளும் சேர்ந்துக் கட்டிய கல்அம்பலத்துக்கு மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரையிலான பூசை செலவுக்கு பணமும் நெல்லும் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுபோல, தண்ணீர் வார்க்கிற ஆளுக்கும் கூலியாக 'நெல்' வழங்கப்பட்டுள்ளது. சித்திரை பரணி பூசை, சங்கரமாதம் சிறப்புப் பூசை, பிரதோச பூசை, கார்த்திகை மாதம் அத்தாளப்பூசை, திருக்கார்த்திகை நறுநெய்வார்ப்பு, வெஞ்சன வகை ஆகியவற்றின் செலவுக்கும் மடத்தின் பண்டாரத்தில் இருந்து நெல் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல திருப்பள்ளியெழுச்சி பூசை, சிவராத்திரி பூசை, விளக்குப்பூசை, மடத்தாயிக்கு சீலை வாங்குதல், சங்கு ஊதுதல், வெள்ளிமலை வேலாயுதப்பெருமாளுக்கு உசர பூசை, பூரடம் பிறந்தநாளில் மகேசுவர பூசை உள்ளிட்டவைகளுக்கும் மொத்தம் கோட்டை 118 1/2 வீசம் 3 படி பண்டாரத்திலிருந்து செலவு செய்யப்பட்ட செய்திகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.
மேற்படி, 'தன்மப்பிரமாணத் தர்மத்துக்கு ஏதாவது தடங்கல் வந்தால் வீரவநல்லூர் ஊராரும் கோயிமையாரும் வெள்ளிமலை வேலாயுதப் பெருமாள் பண்பாரத்தில் கூடிப் பேசி தீர்ப்பிச்சு கொண்டு தன்மம் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்' என்று கல்லிலும் செம்பிலும் வெட்டி தானம் விட்டுக் கொடுக்கப்பட்டதாக இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது. மடத்துவாயிலின் தெற்குப் பக்கம் 2ஆவது கல்வெட்டு அமைந்துள்ளது.
கல்வெட்டு கி.பி.1683ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 2 கற்களில் வெட்டி இணைத்து சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் கல்மடம் கட்டியதோடு தானமும் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டும் சுருக்கமாகக் கூறுகிறது. கல்மடத்திற்கு பிள்ளைமார் சமூகத்தவர் பிள்ளையார் பூசைக்கும், மகேசுவர பூசைக்கும், விசேச பூசைக்கும் கி.பி. 1678ஆம் ஆண்டு நிலதானம் செய்துள்ள செய்தியையும் கல்வெட்டு குறிப்பிட்டு காட்டுகிறது.
சாணார் குல இராமநாச்சியார் மடத்தின் கடனை அடைத்தல்:சிவபாண்டி ஆண்டார் கல்மடத்தின் நிலங்கள் மடத்தின் செலவினங்களுக்காக 750 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பராக்கிரம பாண்டிப் பெருமாள் என்பவர் மடத்திற்கு படுகமிட்ட வகையிலும் 400 ரூபாய் மடத்திற்கு கடன் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடன் ஏற்பட்டதால் மடம் செயல்பட முடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கல் மடத்திற்கு ஏற்பட்ட கடன்தொகை 1150 ரூபாயை நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாணார் நயினார், ஆண்டிச்சி அவர்களின் மகள் இராமநாச்சியார் வழங்கித் தீர்த்து வைத்துள்ளாள். அவள் கல்மடத்திற்கு பணமும் நிலமும் தானமாகக் கொடுத்துள்ளாள்.
மேலும், 'கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் என்பவர் மடத்துக்கு விட்டுக்கொடுத்த அறைப்பிரையை மாற்றி சிறை மடத்து மேல்கரையில் வீடும் கட்டிக் கொடுத்துள்ளாள். அதுவன்றி மடத்து வேலைக்கு மிடி மகள் சிற்றம்பலமும் அருவியார் மகன் ஆண்டானும் கொடுத்துள்ளாள். பறையடிமையாக உலகுடாச்சி மகள் சாத்தியும் முலை உண்ணியும் பெரிய மாதி மகள் அணஞ்சியும் முலை உண்ணியும் மேற்படியாளின் கணவன் சேளானையும் வழங்கியுள்ளாள்'என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இந்தத் தர்மத்தை இராமநாச்சியாரும் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் சேர்ந்து பராமரித்து வரவேண்டும் என்றும் கல்வெட்டு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கல்மடத்திற்கு வழங்கப்பட்ட தானத்தின் மூலம் மடத்தின் கணக்கு பிள்ளைக்கு ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தானம் கி.பி.1682ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சிவிந்திரமுடைய நயினாருக்கு பால்பாயிதம் வைக்க பண தானம்:சிவபாண்டி ஆண்டாரின் கல்மடத்திற்கு பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் என்பவரும் பண தானம் செய்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு மாதந்தோறும், மூல நட்சத்திரத்துக்கு சிவிந்திரமுடைய நயினாருக்கு பால்பாயிதம் வைக்க 200 ரூபாய் தானம் கொடுத்துள்ளார். தானப் பணத்தின் வட்டியின் மூலம் பால்பாயிதம் தொடர்ந்து சுவாமிக்கு வைத்து வரவேண்டும் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தானத்தை அவர் கி.பி.1685ஆம் ஆண்டில் செய்துள்ளார்.
கல்வெட்டுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை தேவை: கணக்கன் பராக்கிரம பாண்டிய பெருமாள் சாணார் குலத்தைச் சேர்ந்த இராமநாச்சியாரை உயர்வு பட மரியாதையுடன் "எங்கள் தாயார்" என்று குறிப்பிட்ட செய்தியையும் மேலும், மடத்தில் கட்டிவைத்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்பித்த அண்ணாவிக்கு பணம் 1ஆம் 1 கோட்டைநெல்லும் ஊதியமாகக் கொடுக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேற்படி, மடத்தின் செலவுகளுக்குத் தானம் செய்யப்பட்ட நிலம், வரவு நிலையிலுள்ள பாட்டம் பணம், கடமைப் பணம் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. அதோடு, மடத்தில் ஒற்றிக்கு வைக்கப்பட்டிருந்த கடன் பணம் 150-ம் வழங்கி மீட்கப்பட்ட செய்தியையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது' என்று அவர் கூறினார்.
மேலும், 'இந்தக் கல்மடமும் அதிலிருக்கின்ற கல்வெட்டுகளும் வரலாற்று முக்கியத்துவமானவை ஆகும். தமிழர் வரலாற்று அடையாளமாகத் திகழும் வீரகேரள நல்லூர் கல்மடம் இடிந்துவிழும் நிலையிலுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த கல் மடத்தையும் இதில் நிறைந்துள்ள கல்வெட்டுகளையும் பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ராஜராஜ சோழன் சதய விழாவும் அவரை துரத்தும் சாதிய சாயமும்!..