கன்னியாகுமரி: 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்ந்த சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு , மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.
குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இதே போன்று மணக்குடி மீனவ கிராமத்தில் 118 -க்கும் மேற்படோரும், கொட்டில்பாடு பகுதியில் 140 மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று சுனாமியால் உயிரிழந்த 18-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மணக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நினைவு திருப்பலி நிறைவேற்றபட்டது. திருப்பலியில் ஆழி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட, ஏராளமானோர் கலந்துக் கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டியும் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.