கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான பேச்சிப்பாறை அடுத்த வலியமலை கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவருடைய இரண்டாவது மகன் அபினேஷ் (11). மணலோடை அரசு உயர்நிலை பள்ளியில், 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் அபினேஷ், தன் தாயாருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காட்டு வழியாக வலியமலை பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் அபினேஷை பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சிறுவன் அபினேஷின் தாயார் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். சிறுவனின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சிறுவன் அபினேஷை மீட்டுள்ளனர். ஆனால் அப்பகுதியில் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் டோலி கட்டி, காட்டு வழியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றின் மூலமும், குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் அபினேஷை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் குலசேகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.