கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஆண்டிற்கு மூன்று முக்கிய சுற்றுலா சீசன்கள் உள்ளன.
அதில் மிக முக்கிய சுற்றுலா சீசன் என்பது கோடை விடுமுறை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சுற்றுலா மையங்கள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால், இரண்டு ஆண்டுகள் கோடை விடுமுறைகளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால், இந்த முறை தளர்வுகள் கொடுக்கப்பட்டு அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்ட காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை களைகட்டியது முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, சூரியன் உதித்தல், மறைத்தல் காட்சிகளை காணும் காட்சி கோபுரம், சுற்றுலாப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.