கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டனம், மணக்குடி போன்ற கிராமங்களில் இருந்து 10 மீனவர்கள் கடந்த 19ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் அங்கிருந்து கர்நாடக மாநிலம் மால்பே என்னும் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 10 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் இவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்களை பிணைக் கைதிகளாக்கி கர்நாடகாவிற்கு அழைத்துச்சென்று கர்நாடக கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். தற்போது 10 கன்னியாகுமரி மீனவர்களும் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இதனையடுத்து இன்று (அக.28) மீனவர்களின் குடும்பத்தினர், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: வெளிமாநில மீன்களை விற்கக் கூடாது - புதுச்சேரி மீனவர்கள் போராட்டம்