காஞ்சிபுரம்:பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாகச முயற்சியின் போது டிடிஎப் வாசனின் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானதாக வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள டிடிஎப் வாசனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், டிடிஎப் வாசனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசனுக்கு, லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.