காஞ்சிபுரம்:வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்குடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (27). திருமணமாகாத இவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் தம்பி, தங்கைகளுடன் வசித்து வந்தார். கஞ்சா போதைக்கு அடிமையானதாகக் கூறப்படும் அஜித், தன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்கி விற்பது, அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அஜித் மீது வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் கஞ்சா போதையில் அஜித் உள்ளே நுழைந்து தகராறு செய்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தை வாலாஜாபாத் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ‘ஊருக்குள் பல கொலைகளை செய்துவிட்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் என்னைப் போய் பிடிக்கலாமா’ என போதையில் அஜித் உளறியிருக்கிறார். அஜித்திடம் காவல் துறையினர் நடத்திய மேல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அவர் அளித்த தகவலை அடுத்து பல மாதங்களுக்கு முன்பு காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நபர் ஏரியில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில் சடலமாக காவல் துறையினரால் மீட்டெடுக்கப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்ட அஜித் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.