காஞ்சிபுரம்: கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மகன் ரஞ்சித் குமார் (26). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி, மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவந்தார்.
இவர், நேற்று (டிச. 31) இரவு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பர்களுடன் தங்கி ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இன்று மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் படப்பைக்குத் திரும்பியுள்ளார்.
வாகனம், மலைப்பட்டு பகுதியில் வேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையை விட்டு கீழே இறங்கி பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரஞ்சித் குமாருக்குத் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சோமங்கலம் காவல் துறையினர், உயிரிழந்த ரஞ்சித் குமாரின் உடலைக் கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் குடிநீர்