காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்பாதுரைக்கு கடந்த 10 நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் தனது மகன்களிடம் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அவரது மகன்கள் மருத்துவர்களிடம் தனது தந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளனர். சில மணி நேரத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், பிளாஸ்மா வாங்கி வர கூறியுள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலையில் பிளாஸ்மா வாங்கிவந்து அளிக்கையில், இதைச் செலுத்த இயலாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதையடுத்து அப்பாதுரை சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். தொடர்ந்து பாக்கி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.