காஞ்சிபுரம்:வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் ஊத்துக்காடு பகுதியைச்சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். 46 வயதான மோகன்ராஜிற்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அரசு மதுபானக்கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது சாலை விரிவாக்கப்பணிக்கு சென்ற ஆர் ஆர் இன்ஃபிரா சொல்யூசன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.
மின்வாரிய அலுவலகத்தில் நைட் டூட்டி செய்யும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். அப்போது வயர்மேன் மோகன்ராஜ் மதுபானகடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி, வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றி, அவளூர் மார்க்கமாக செல்லும் லைனை இயக்க முயன்றபோது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, மின் கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.