காஞ்சிபுரம்:அரசு மதுபானக் கடை பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக மதுபானங்கள் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்படுகின்றது. நேற்று (பிப். 10) நள்ளிரவு மதுபான கடை கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்ரக மதுபான குப்பிகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், மதுபான குப்பிகளையும், கொள்ளையடித்த நபர்களையும் தீவிரமாகத் தேடினர்.
அப்போது அருகிலுள்ள தோப்பு பகுதியின் புதரில் மறைத்து வைத்திருந்த மதுபான குப்பிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபான கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த மதுபான கடையில் இரண்டு முறை கொள்ளை முயற்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.