காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பண்டிகை முடிந்த பிறகு, செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பாடாமல் தடுப்பதற்காக காவல்துறை தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ள செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் இறைச்சிக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.