சென்னை: காஞ்சிபுரம்வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலைப் பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர், கடந்த 14ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலைப் பிரிவை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மனுவில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி வடகலைப் பிரிவினரையும் வேதப் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுத்தது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டு இருந்தார். வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (மே 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வடகலைப்பிரிவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இரு தரப்பினரையும் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
ரூ.50 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என்றால் இருதரப்பினரும் ஓடிவிடுவர்: மேலும் 11 நொடிகள் மட்டுமே வடகலைப்பிரிவினர் மந்திரங்களை சொல்வதால், ஸ்வாமி ஊர்வலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி நாட்டில் பல பிரச்னைகள் நிலவுவதை சுட்டிக்காட்டி, கோயில் சார்பாக 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றால் இரு தரப்பினரும் ஓடி விடுவர் எனக் கூறினார்.