காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''அதிமுக என்றால் அண்ணா திமுக அல்ல; அடிமை திமுக. மோடியின் இரண்டு அடிமைகளாக ஓ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும் உள்ளனர். யார் சிறந்த அடிமை என்று இருவருக்கும்போட்டியே வைக்கலாம். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஏதும் செய்யவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல கோடி ரூபாய் மதிப்பில், மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகும் நாளில் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி அதனைத் திறந்து வைத்தார். ஆனால் சசிகலா அன்றைய தினம் மருந்துவமனைக்கு சென்று விட்டார்.
ஆனால், பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு சென்று மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தாலேயே புதிதாக திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் நேற்றுஇரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் உங்களிடம் வாக்கு கேட்க வரும்போது, ஜெயலலிதா எப்படி இறந்தார் என நீங்கள் அவர்களிடம் கேட்டால் பதில் இருக்காது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சராக மறைந்த ஜெயலலிதாவிற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் படிப்படியாக முன்னேறி வந்தேன் என்கிறார். அவர் சசிகலா காலில் விழுந்து தான் முதலமைச்சரானார்.
உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சார பரப்புரை மக்கள்எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியாவிலே ஊழல் வழக்கிற்காக நான்கு முறைசிறை சென்ற ஒரே முதலமைச்சர் என்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான். மோடியின் பேச்சை கேட்டு வேறு வழியில்லாமல் நீட் தேர்வை கொண்டு வந்து திணித்தனர். அதனால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. வருடத்திற்கு நான்கு மாணவர்கள் நீட் தேர்வினால் இறந்து வருகிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘வெற்றிக் கூட்டணி அமைக்க தலைவருக்கு தெரியும்’ - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!