நிலவுக்கு ஆள் அனுப்ப சோதனை நடத்தும் நாட்டில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மலக்குழி மரணங்கள், விஷவாயு மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து போராடும் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. விஷவாயு மரணங்களை தடுக்க சட்டத்தை வலுவாக்கி போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தீண்டாமை உணர்வுடன் செயல்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு பணியமர்த்தும் இடத்திலிருந்து தொடங்கும் தீண்டாமை எண்ணத்தை எப்போது அகற்றும். இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களின் மரணத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசு எப்போது விழித்துக்கொள்ளும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. விஷவாயு மரணத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் மற்றொரு மரணம் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை கிராமத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் இருந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய அதேபகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய முற்பட்டார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில் உள்ளேயே இருந்துள்ளார்.