காஞ்சிபுரம்: பல்லவர்மேடு அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன்(35). இவர் மீது பல காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், அடிதடி, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் கேட்பது, கஞ்சா விற்பனை போன்றவற்றிலும் இவரும் இவரது கூட்டாளிகளும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (டிச.26) பட்டப்பகலில் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், பிரபாகரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, காவல் நிலையத்தில் சென்று கையொப்பமிட்ட சென்று கொண்டிருந்த பிரபாகரனை, உடலின் பல பாகங்களில் கத்தியால் பயங்கரமாக வெட்டி அந்தக் கும்பல் படுகொலை செய்தது. இசசம்பவம் நடந்த இடத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை ஆகியோர் வந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதன் பிறகு, அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக பிரபாகரனால் கொல்லப்பட்ட தேமுதிக பிரமுகர் சரவணனின் தம்பி ரகு மற்றும் அவரது நண்பர்கள் என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது.