காஞ்சிபுரம்மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆரணிசேரி பகுதியைச்சேர்ந்த நண்பர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் கருணாகரன். இதில் பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சொந்தமாக ’டாட்டா ஏஸ்’ என்ற மினி லாரி வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அந்த வாகனத்திற்கு கருணாகரன் என்பவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் வந்தனர். பின்பு, பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதில் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகின்றது. பின்னர் இருவரும் மது போதையில் தங்களது இருசக்கர வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு, ஏனாத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த தரைப்பாலத்தில், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமில்லாததால் பாலத்தின் மீது மோதி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தனர். பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் மூச்சுத்திணறி பாலகிருஷ்ணன் என்பவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.