காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள மகப்பேறு நலப் பிரிவில் மட்டும் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் காமாட்சி (28) என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கணவர் மூர்த்தி, 4 வயது மகன் சக்திவேல், உறவினர் குள்ளம்மாள், அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோருடன் வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது நேற்று காமாட்சிக்கு சுகப் பிரசவம் ஆன நிலையில், அவருடைய கணவர் மூர்த்தி, மகன் சக்திவேல், குள்ளம்மாள், மகள் சௌந்தர்யா ஆகிய 4 பேரும் மகப்பேறு நலப்பிரிவு அருகே இருந்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு பெண் இவர்களுடன் பேச்சு கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் நேற்று மாலை மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே உணவு சாப்பிடலாம் என அவர்களை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து சிறுவன் சக்திவேல், சிறுமி செளந்தர்யா ஆகியோரைக் காணவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், அருகில் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பார்கள் என நினைத்து அவர்களைத் தேடியுள்ளனர். ஆனால் சுமார் 20 மணி நேரம் ஆகியும் இருவரும் எங்கும் காணப்படாததால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி மற்றும் குள்ளம்மாள் ஆகியோர், மருத்துவமனை நிர்வாகத்திடம் தங்கள் குழந்தைகளை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.