தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி - மதுரையில் ஷவர்மா கடைகளில் சோதனை

காஞ்சிபுரத்தில் ஷவர்மா விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் சுகாதாரமற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியதற்காக 10 கடைகளின் உரிமையாளர்களிடம் ரூ.20,000 அபராதம் பெறப்பட்டது.

அபராதம்
அபராதம்

By

Published : May 5, 2022, 6:52 PM IST

காஞ்சிபுரம்:தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 18 பேருக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு அவர்களில் ஒருவர் உயிர் இழந்தார்.

இதற்கு அவர்கள் சாப்பிட்ட ஷவர்மா உணவே காரணம் என்று கண்டறிடயப்பட்டது. அவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11ஆவது படிக்கும் பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷவர்மா விற்பனையாகும் கடைகளில் சோதனை: இதன் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா தலைமையில், இரண்டு குழுக்கள் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு, கச்சபேஸ்வரர் கோயில் பகுதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் இன்று (மே 05) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஷவர்மா விற்பனை
தரமில்லாத கடைகளுக்கு சீல்: ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் கோழி, ஆட்டு இறைச்சிகளில் பழைய இறைச்சியை பயன்படுத்துகிறார்களா? மேலும், அவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் உள்ள ஷவர்மா விற்பனை கடை ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தப்பட்டிருந்த இறைச்சிகளின் மாதிரிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட கச்சபேஸ்வரர் கோயில் அருகாமையிலுள்ள எஸ்.வி.என் பிள்ளை தெரு பகுதியில் செயல்பட்டு வந்த ஷவர்மா விற்பனை கடை ஒன்று உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வந்தது மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் கண்டறியப்பட்டு அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

10 கிலோ சிக்கன் பறிமுதல்:இதேபோல, மதுரை மாவட்டத்தில் உள்ள 52 சிக்கன் ஷவர்மா கடைகளில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் சோதனை நடத்தினர்.

இதில் 10 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதோடு 5 கடைகளுக்கு இது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் பயன்படுத்தக்கூடாது; சமைத்த உணவுப்பொருள்களை குளிரூட்டி மீண்டும் விற்பனைக்கு வைக்க கூடாது எனவும் உணவுப்பொருள்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000 அபராதம்:சென்னை கிண்டியில் உள்ள உணவகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டன. தொடர்ந்து, அதற்கான துறை சார்ந்த மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சோதனையில் காஞ்சிபுரத்தில் ஷவர்மா விற்பனை செய்த கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடினை கண்டறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 10 கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.20,000 அபராதமாக விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தரமற்ற ஷவர்மாவால் 16 வயது மாணவி உயிரிழப்பு - மருத்துவமனையில் 18 மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details