தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் முக்கியத் திருப்பமாக, ஏரி அருகே இருக்கும் நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்ததால் மோசஸைக் கூலிப்படை மூலம் கொலை செய்ததாகக் குற்றவாளி நவமணி ஒப்புக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமங்களம் பழைய நல்லூரில் வசித்துவந்த மோசஸ், ஸ்ரீ பெருமந்தூர் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய நல்லூர் பகுதியிலுள்ள ஏரி நிலத்தைச் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகச் செய்தி சேகரித்துள்ளார். அச்செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து, நவமணி உள்ளிட்ட சமூக விரோதிகள் அவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.