17ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்துதீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமியை ஆதரித்து காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவினரால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க இயக்குநர்களின் ஊழல்களால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது.
இதைப் போக்கி அனைத்து பட்டு கூட்டுறவுச் சங்கங்களும், கூடுதல் நிதி பெற்று புனரமைக்கப்பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத பட்டுப் பூங்காவை திறக்க உரிய நடவடிக்கையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.