108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவத்தின் 3ஆம் நாளின் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் இன்று நடைபெற்றது.
இதில் வரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் வந்து நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டு பக்தியுடன் வணங்கினர்.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட சேவை வாகனம் இதனைத் தொடர்ந்து உள்ளூர், வெளியூர்களிலிருந்து வருகை தந்த 101 பஜனை கோஷ்டிகள் பாடி வர கருட வாகனத்தின் முன்னும் பின்னும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பல லட்ச கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருடசேவை உற்சவத்தையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.