காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதி அத்திவரதர் வைபவம் 40 நாள் நடைபெறுவது வழக்கம். இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் 23ஆம் வைப நாளான இன்று காலை அத்திவரதர் இளம்பச்சை நிற பட்டு உடுத்தி மகிழும் பூமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர்.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் நேற்று மாலை அத்திவரதரை தரிசனம் செய்த நிலையில், இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இதனால் திருக்கோயிலைச் சுற்றி கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
22ஆம் நாளான நேற்று மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தமாக 22 நாட்களில் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சர் சாமி தரிசனம் செய்ய வர இருப்பதால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.