பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும், மண் தலமாகவும் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் உள்ளது.
இன்று(ஏப்.15) பக்தர்களின் தரிசனத்திற்காக இக்கோயிலின் ராஜகோபுர கதவினை கோயிலில் பணிபுரியும் காவலர், சிவனடியார்கள் சிலர் உதவியுடன் திறக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபக்க கதவினை திறந்துவிட்டு மறுபக்க கதவை திறந்தபோது எதிர்பாராத விதமாக வீசிய காற்றால் கதவு மூடியுள்ளது.
அப்பொழுது அருகில் நின்றிருந்த பெண் சிவனடியார் லட்சுமி, கோயில் காவலர் மணி, மற்றொரு சிவனடியார் தியாகராஜன் என மூன்று பேர் கதவின் இடுக்கில் சிக்கி அவர்களுக்கு எதிர்பாராத விதமாக கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பெண் சிவனடியார் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் சிவகாஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:’கரோனாவின் 2ஆவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது’ - தமிழ்நாடு அரசு