காஞ்சிபுரம்: Jewellery robbery:மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகேவுள்ள மாருதி நகரில் வசித்து வருபவர், ஆடிட்டர் மேகநாதன்.
இவருக்கு பாலகிருஷ்ணன் உள்பட இரு சகோதரர்கள் உள்ளனர். சகோதரர்களான மூவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். மேகநாதன் சகோதரர்கள் இருவரும் அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல அவர்கள் கடந்த 23ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் 3 சகோதரர்களின் மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது, மதியம் ஒரு மணியளவில் திடீரென அந்த வீட்டில் முகமூடி அணிந்த 3 நபர்கள் கத்தியுடன் நுழைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராத பெண்கள் மூவரும் கூச்சலிடத் தொடங்கியபோது கையிலிருந்த ஆயுதங்களைக் காட்டி மூன்று பேரையும் மிரட்டியுள்ளனர்.
சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உள்பட வீட்டில் இருந்த சுமார் 44 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.