காஞ்சிபுரம்:ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அம்மாணம்பாக்கத்தைச்சேர்ந்தவர் குமரேசன்(35). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஜூன் 21) காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமரேசனிடம் தொடர்புகொண்டு, அது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக இன்று(ஜூன் 22) காலை வீடு திரும்பிய குமரேசன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருபதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சுவற்றின் மீது ஏறி வீட்டினுள் குதித்து திருட்டுச்சம்பவத்தில் இருவர் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.