காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள பிரபல ரவுடிகள் எல்லாம் சிறையில் உள்ள நிலையில் நாவலூர் பகுதியை சேர்ந்த வாக்கு (எ) வினோத் (22) என்பவர் தான் பெரிய ரவுடி என கூறி படப்பை நாவலூர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி செலவிற்கு பணம் கேட்பது தர மறுத்தால் அவர்களை அடித்து பணம் பறிப்பது போன்ற செயல்களில் வினோத் தலைமையில் நான்கு பேர் கொண்ட கும்பல் அட்டூழியத்தில் ஈடுபடுவதாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனை அடுத்து மணிமங்கலம் உதவி காவல் ஆணையர் ரவி தலைமையில் எட்டுபேர் கொண்ட தனி படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பட்டாகத்திகளுடன் நாவலூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகில் கஞ்சா போதையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா போதையில் இருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்ட போது கத்தியை காட்டி போலீசாரையே மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து பேரையும் பிடிக்க முயற்சி செய்த பொழுது போலீசாரை தள்ளி விட்டு வாக்கு என்கிற வினோத் தப்பி ஓடியுள்ளார் அப்பொழுது மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் கால் முறிந்தது. உடனே குற்றவாளியாக இருந்தாலும் வலி தாங்க முடியாமல் கதறியதை பார்த்ததும் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.