காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தெரசாபுரம் கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் சடலம் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடற்கூராய்வில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்துகிடந்த பெண் ராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த பிரியா (23) என்பதும் இவர் பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
அதன் பிறகு பிரியாவின் காதலன் வெங்கடேசன் மற்றும் பாலியல் தொழில் தரகராக இருந்து வந்த ஜோதி ஆகியோரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலையுண்ட பிரியாவுக்கு காஞ்சிபுரம் ஓரிக்கை அன்னை சத்யா தாஸ் நகரைச் சேர்ந்த நவீன் (22), என்பவருடன் காதல் ஏற்பட்டு இளம் வயதிலே அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. இதன் பிறகு பிரியாவின் கணவன் நவீனுக்கும், காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த கல்பனா (32) என்ற கஞ்சா வியாபாரி பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்ட நிலையில் பிரியாவை விட்டு நவீன் பிரிந்து தனியாக சென்றார்.
அதன் பிறகு பிரியா, பெண் இடைதரகரான ஜோதி என்பவர் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். மேலும், கஞ்சா போதைக்கும் அடிமையான பிரியா தன்னை கைவிட்டுச் சென்ற கணவன் நவீனை பொது இடங்களில் பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கவும் செய்துள்ளார்.