காஞ்சிபுரம்:அவளூர் கூட்டுச்சாலையில் பாலமுருகன் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது டீக்கடையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் பாலமுருகன் மதுபானம் வாங்கி ஒதுக்குப்புறமாக அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் மது அருந்திக்கொண்டிருந்த பாலமுருகனிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை எனக் கூறவே ஏடிஎம் கார்டை கேட்டுள்ளனர். ஏடிஎம் கார்டு கொண்டு வரவில்லை எனக் கூறியதைக் கேட்டு ஆவேசமடைந்த அந்த மூன்று பேரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாலமுருகனை திடீரென கத்தியால் சரமாரியாகத் தாக்கியும், அங்கிருந்த பீர் பாட்டிலாலும் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகனிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகன் சுமார் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள ஏபிஜே என்ற தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைப்பெற்றார்.