காஞ்சிபுரம்:2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த பட்ஜெட் தொடரின் போது, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப் 15) அவரது உருவச் சிலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்குத் திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “எனது அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்தி இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது காஞ்சி மாநகர். இங்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் துவங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன். இன்று இந்த திட்டத்தைத் துவங்கிவைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள், உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி. ஆனால், பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக வதந்திகளைப் பலரும் பரப்பினர். ஆட்சிக்கு வந்ததும் நிதி நிலைமை சரி இல்லாததால் தான் அப்பொழுது கொடுக்க முடியவில்லை, அதனைச் சரிசெய்துவிட்டு இப்போது கொடுக்கிறோம். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி.