காஞ்சிநகர் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் கடந்த 47 நாட்களாக மக்கள் வெள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது. இன்றிலிருந்து காஞ்சிபுரம் இயல்பு நிலைக்கு மாறவிருக்கிறது. இதற்கு காரணமானவர் அத்திவரதர்!
வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியேவரும் அத்திவரதருக்கு சிறப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம் 47 நாள்களுக்கு பிறகு இன்றைக்கு முடிவுக்கு வருகிறது.
மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் செல்லும் அத்திவரதர் பொதுமக்கள் தரிசனம் நேற்று முடிவடைந்த நிலையில், அத்திவரதர் சிலை இன்று கோயிலுக்குள் இருக்கும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறது. இனி 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் அத்திவரதர் வெளியேவருவார் என்பதால் இன்று அதிகாலையில் பரிகார பூஜை தொடங்கப்பட்டது.
மேலும் அத்திவரதர் சிலையை பாதுகாக்கும் வகையில் மூலிகை திரவியங்கள் சிலைக்கு பூசப்பட்டு இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டு பின் குளத்தில் நீர் நிரப்பப்படும்.