காஞ்சிபுரம்: மாண்டஸ் புயலின் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகிலிருந்து முதற்கட்டமாக ஐந்து கண் மதகின் மூன்றாவது ஷட்டர் வழியாக இன்றி மதியம் 12 மணியிலிருந்து 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டு, அதன் வழியாகத் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் ஏற்பட்டு கடலை போல் காட்சியளிக்கிறது. இதனால் தற்போது உபரி நீர் செல்லும் மூன்றாவது ஷட்டரில் வந்து மோதுவதால், இரும்பு ஷட்டர் வேகமாக ஆடுவதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காற்றின் வேகத்தால் இரும்பு ஷட்டர் ஆடுவது சற்று அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. காற்றின் வேகத்திற்கு இதுபோல் ஷட்டர் ஆடும், இதனால் எந்த வித பாதிப்பும் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.