காஞ்சிபுரம்:பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு பரந்தூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை கட்ட விட மாட்டோம். எட்டு வழிச் சாலை திட்டமும் நிறைவேறப் போவதில்லை” என்றார். மேலும் பேசிய அவர், “மக்கள் வைக்கும் கோரிக்கைகளைக் கவனித்து, அதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களில் அரசு கவனம் செலுத்தி தீர்வு காண்பதில்லை என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் மதுக் கடைகளோ, விமான நிலையமோ வேண்டாம் எனப் போராடினால், அரசு அவற்றை தொடர்ந்து செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு முனையமே இன்னும் முழுதாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு விமானமே இல்லாத இடத்திற்கு விமான நிலையம் எதற்கு?. ரூபாய் 20 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் கட்டுவதால் அதில் கமிஷன் தவிர வேற எதுவும் வராது. என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "கடலில் பேனா சிலை கட்டுவதற்கு தேதி அறிவிக்கும் பொழுது, அந்தப் பேனாவை எடுக்கும் தேதியை நான் அறிவிப்பேன். ஏனெனில் ஆட்சியும் அதிகாரமும் ஒரே இடத்தில் எப்போதும் இருக்காது. மக்கள் வாழ்விடத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு எனக்கூறி அரசு இடிக்கும் போது, கடல் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா?. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது எனப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.