தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வெண்ணெய் உருண்டை கல்" - ஆன்மிகத்தின் ஆக்கமா? அறிவியலின் தாக்கமா?

விடை கிடைக்காத மர்மமாய் இருக்கும் வெண்ணெய் உருண்டை கல்லின் வரலாற்று சிறப்புகள் இதோ!

வெண்ணெய் உருண்டை கல்

By

Published : Oct 13, 2019, 5:13 PM IST

“நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்
தாமரை பொருட்டின் காண்வரத் தோண்றி” (பெரும் : 402-405)

பல இதழ்களை உடைய தாமரை மலரின் நடுவே உள்ள பொகுட்டினைப் போல செங்கற்களால் கட்டப்பட்டு விளங்கும் உயர்ந்த மதில்களை உடையவைக் காஞ்சி மாநகரம் என்று காஞ்சி மாநகரின் நகரமைப்பைப் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

பழமையும், புகழும் உடைய காஞ்சி மாநகரம் எண்ணற்ற சுற்றுலாத் தளங்களை தன்னகத்தே கொண்டாலும், காஞ்சி என்றாலே நமக்கு முதலில் புலப்படுவது மாமல்லபுரம் கடற்கோயில் தான். இங்கு வருகின்ற காதலர்களுக்கெல்லாம் அடைக்கலம் தந்ததாலோ என்னவோ சிலர் இதை 'காஞ்சியின் லவ்வர்ஸ் பார்க்' என்று அழுத்தமாக சொல்லுவார்கள்.

பல்லவ பேரரசின் மன்னர்களுள் ஒருவனான மாமல்லன் என்று அழைக்கப்பட்ட நரசிம்ம பல்லவன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் நிறைந்திருந்த குன்றுகளைச் செதுக்கி அவ்வூரையை சிற்பக்காடாக்கினான். அதனால் அவ்வூர் அவனது பெயரால் மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது.

யுனெஸ்கோ அறிவித்த பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் தமிழனின் கட்டக்கலைகள் இன்று கடல் தாண்டி பறப்பதற்கு காரணமாகி நிற்கிறது. ஆர்ப்பரித்த அலைகள் அடிக்கடி தரிசிக்கும் இந்த கடற்கரை கோயிலுக்கு அருகில் தனித்துவமாக நிற்கிறது வெண்ணெய் உருண்டை கல். மக்களால் கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்று செல்லமாக அழைக்கப்படும் அந்தப் பாறை அவர்கள் எடுக்கும் செல்பிகளை அலங்கரித்து கொண்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

ஐந்து மீட்டர் விட்டமும், ஆறு மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்ட இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் ரகசியம் மட்டும் நம் சிந்தனைக்கு எட்டாமல் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இது ஆன்மிகத்தின் ஆக்கமா இல்லை, அறிவியலின் தாக்கமா என்ற ஆராய தோன்றுகிறது. இது கடவுளின் சக்தி என்று விஞ்ஞானிகளும், இது இயற்கையான உருவாக்கம் என்று விஞ்ஞானிகளும் இந்த பாறாங்கல் சரிவதைத் தடுப்பது உராய்வுவிசை அதை புவி ஈர்ப்பு மையம் ஒரு சிறிய தொடர்பு பகுதியில் சமநிலைப்படுத்துகிறது என்று அறிவியலாளர்களும் விவாதிக்கின்றனர்.

பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் இந்த வெண்ணெய் உருண்டை கல்லை குன்றிலிருந்து கீழே நகர்த்திய முயற்சியில் தோல்வியடைந்தார் . அதற்கு பின்னர், கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய கல்லை 1908இல் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், ஏழு யானைகளின் உதவியால் கீழே நகர்த்த முயற்சித்தும் தோல்வியை தழுவினார்.

இன்னும் பல வரலாற்று சிறப்புகளை உடைய இந்த வட்டப்பாறையை பார்த்து வியந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எல்லோரையும் போலவே பாறையின் கீழே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நீங்களும் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து கொள்ளுங்கள்!.

இதையும் படியுங்க:

மாமல்லபுர சிற்பங்களைக் கண்டுகளித்த இருநாட்டுத் தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details