தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டைத் தொடர்ந்து காஞ்சியிலும் கழிவறையைச் சுத்தம் செய்த மாணவி - பள்ளி தலைமையாசிரியை பணியிடமாற்றம் - Social activists worry about the matter

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் தான் பயிலும் பள்ளியின் கழிவறையை பள்ளிச் சீருடையுடன் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடை தொடர்ந்து காஞ்சிபுரம் பள்ளியிலும் அவலம்- சீருடையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவி!
ஈரோடை தொடர்ந்து காஞ்சிபுரம் பள்ளியிலும் அவலம்- சீருடையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவி!

By

Published : Mar 29, 2022, 6:45 PM IST

Updated : Mar 29, 2022, 7:37 PM IST

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, ஆனம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்துள்ளார். பள்ளி மாணவியை ஆசிரியர்கள் யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவச் சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இதுபோன்று நடந்ததா என்பது தெரியவில்லை.

அந்தப் பள்ளி மாணவி சீருடையில் கழிப்பறையைச் சுத்தம் செய்து கழுவும் காட்சிகளை யாரோ ஒருவர் ஒளிப்பதிவு செய்வது தெரிய வருகிறது. அந்த நபர் யார் என்பதும் தெரியவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் பள்ளி மாணவி சுத்தம் செய்யும் வீடியோவானது வேகமாகப் பரவி வருவது ஆனம்பாக்கம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதி தெரிவிக்கையில், 'பள்ளியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம், கழிவறைகள் அனைத்துமே தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாணவி எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர் ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிந்ததும் உண்மை தெரியும்:இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவிக்கையில், 'இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின் தான் இவ்விவகாரத்தில் உண்மைத்தன்மை தெரியவரும். குறிப்பாக ஏதேனும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு நடைபெற்று இருந்தால் துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

ஈரோட்டைத் தொடர்ந்து காஞ்சியிலும் கழிவறையைச் சுத்தம் செய்த மாணவி - பள்ளி தலைமையாசிரியை பணியிடமாற்றம்

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் புஷ்பவதியைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி உத்தரவுபிறப்பித்துள்ளார். மேலும் அவர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார்.

பள்ளியில் தொடர்ச்சியான நிகழ்வுகள்:மேலும் இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது. நேற்றைய தினமும் கூட ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட முள்ளம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியின் கழிவறையை காலில் செருப்பு கூட இல்லாமல் மாணவர்களை கொண்டே சுத்தம் செய்யும் வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் அதேபோல் ஓர் சம்பவம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!

Last Updated : Mar 29, 2022, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details