காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. இவர் அதிமுக விவசாய அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராகவும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில், இவர் வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார். புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் அறையில் கடந்த ஒரு வருட காலமாக வசித்து வருகிறார். இவர் வீட்டில் (டிச.6) கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது.
கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில் பழைய வீட்டினை அறையைப் பூட்டிவிட்டு புதிய வீட்டில் இரண்டு நாட்களாக குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இதனையடுத்து நேற்று (டிச.8) அதிகாலையில் பழனி பழைய வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பீரோவிலிருந்து பணம் நகைகள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக பீரோவிலிருந்த 55 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வீட்டு கிருகப்பிரவேசத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அளித்த பரிசுப் பொருள்களும் மொய் வைத்த கவர்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக வாலாஜாபாத் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வாலாஜாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: பிட்காயினில் முதலீடு: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை