காஞ்சிபுரம்: உலகளந்த பெருமாள் கோயில் மாட வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஸ்ரீ பிராப்பர்ட்டீஸ், டீலர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திவந்தார். காஞ்சிபுரம் வையாவூர், சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் குறைந்த விலையில், தவணை முறையில் பணம் செலுத்துவோருக்கு வீட்டுமனை அளிப்பதாகக் கூறி தலா ஒரு நபரிடம் 56 ஆயிரம் ரூபாய் வரையில் வசூல்செய்தார்.
மேலும் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் 56 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் போதும், அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதியை ஸ்ரீதர் அளித்தார். இதனை நம்பி காஞ்சிபுரம், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நடுத்தர, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் பணம் கட்டினர்.
தன் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர், சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதைப் போல் அதற்கான பத்திரங்களையும், சான்றிதழ்களை கொடுத்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி
பணம் கட்டிய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித்துள்ளார். மேலும் அதிகப்படியான ஆள்களைப் பிடித்துக்கொடுத்தால் வாடிக்கையாளர்களை முகவர்களாக மாற்றி அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார்.
இதனால் பல வாடிக்கையாளர்கள் முகவர்களைப் போல் செயல்பட்டு அவர்களுடைய உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், தெரிந்தவர்கள் எனப் பல நபர்களை இதில் சேர்த்துவிட்டுள்ளனர்.