காஞ்சிபுரம்:சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி அருகே, ஒன்றரை சென்ட் அளவிலான பூர்வீக நிலம் உள்ளது. பத்மாவதியின் உடன் பிறந்த சகோதரரான பச்சையப்பன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து, தன்னுடைய பெயருக்கு அந்த இடத்தைப் பதிவு செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் என்பவர், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் மேற்கண்ட போலி ஆவணங்களை ரத்து செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிகை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற உலகநாதன், பதிவாளரை சந்தித்து நீதிமன்ற உத்தரவினை அளித்தார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட போலி பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவு, காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து வாலாஜாபாத் துணை பத்திரப்பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் போலி பத்திரப் பதிவு ரத்து செய்யப்படவில்லை. இதனால் உலகநாதன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் நவீன்குமார் என்பவரை சந்தித்த உலகநாதன் இதுகுறித்து கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு நவீன்குமார், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அந்தப் பதிவை ரத்து செய்துத் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்று, பதிவாளர் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ. 1 லட்சத்தைத் தருவதாகவும் கூறுமாறு உலகநாதனுக்கு அறிவுறுத்தி திட்டம் தீட்டினர்.