கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் காவல் துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டவருகின்றனர்.
பணிச்சுமையின் காரணமாக மனச்சோர்வும், சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்தும் காவலர்கள் பலர் உள்ளனர். இதில் சிலருக்குக் கரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவலர்களின் மனச்சோர்வைப் போக்கிட யோகா பயிற்சியை நடத்திட காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டங்களைச் சேர்ந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றன. காஞ்சிபுரத்தில் செயல்படும் மகாயோகம் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட யோகா பயிற்சி வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.